திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு: துரை வைகோவுக்கு வாய்ப்பு!

By Manikanda Prabu  |  First Published Mar 18, 2024, 1:34 PM IST

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என இந்த முறை மும்முனை போட்டி நிலவவுள்ளது. அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

Latest Videos

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது.  இந்தத் தோ்தலில் அதைவிட அதிக எண்ணிக்கையில் மதிமுக தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை சீட் குறித்து பின்னர் பேசிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருச்சி, விருதுநகர் ஆகிய இரண்டில் ஒரு தொகுதியை மதிமுக கேட்டு வந்தது. இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காங்கிரஸ் வசம் உள்ளது என்பதால், பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி நிலவியது. இந்த சூழலில் மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர் மீது மிகுந்த அதிருப்தி நிலவுவதால் இந்த முறை அவருக்கு கண்டிப்பாக சீட் கிடையாது எனவும், திருச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாது எனவும் தகவக்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்களுக்கு திருநாவுக்கரசர் மறுப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங், விசிக, கம்யூனிஸ்ட் களம் இறங்கவுள்ள தொகுதிகள் எது.? வெளியான இறுதி பட்டியல்

ஆனால், ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, திருச்சி தொகுதி மதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கே பெரும்பாலும் ஒதுக்கி வந்துள்ளது. இந்த முறை திருச்சியை திமுக குறி வைத்தது. திருச்சி அல்லது பெரம்பலூரில் கே.என்.நேருவின் மகன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கே.என்.நேரு தனது மகனுக்காக பெரம்பலூர் தொகுதிக்கே காய் நகர்த்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பெரம்பலூர் திமுகவுக்கும், திருச்சி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வந்துள்ளது. அதேபோல், 4 முறை கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 முறையும், திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் திருச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 59.70 சதவீதம் வாக்குகள் பெற்று 4.5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2004 தேர்தலில் வெற்றி பெற்ற மதிமுக 63.68 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

click me!