மத்திய அரசை கண்டித்து விமானத்தை மறிக்கும் போராட்டம் - ஐயாக்கண்ணு மற்றும் விவசாய சங்கத்தினர் அறிவிப்பு...

First Published Apr 3, 2018, 8:23 AM IST
Highlights
Trichy airport siege condemned central government - Iyakkannu and the farmers unions struggle


புதுக்கோட்டை 

மத்திய அரசை கண்டித்து இன்று திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும், விமானத்தை மறிக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்று புதுக்கோட்டையில் ஐயாக்கண்ணு கூறினார்.

"நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்" என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி  வருகிறது.

அதன்படி, அச்சங்கத்தினர், அதன் மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை 100 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு மாவட்டங்களின் வழியாக சென்று இறுதியில் சென்னை கோட்டையை சென்றடைகிறது.

இந்த நடைபயண குழுவினர் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். 

மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான் ஆகியோருக்கும் ஐயாக்கண்ணு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர்கள் அண்டக்குளம் வழியாக தஞ்சாவூரை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

ஐயாக்கண்ணு நேற்று செய்தியாளர்களிடம், "மரபணு விவசாயத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, அதை தடை செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழி்ப்புணர்வு பயணத்தை நடத்தி வருகிறோம்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

மேலும், மத்திய அரசை கண்டித்து நாளை (இன்று) திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும், விமானத்தை மறிக்கும் போராட்டமும் நடைபெற உள்ளது. 

காவிரி பிரச்சனைக்காக அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இந்த போராட்டத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

click me!