முன்விரோதத்தால் தாய், தந்தை, மகனை தாக்கிய ஐவர் கைது; விடுவிக்க கோரி மக்கள் சாலை மறியல்...

First Published Apr 3, 2018, 8:14 AM IST
Highlights
father mother and son were attacked by people was arrested


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், முன்விரோதம் காரணமாக தோட்டத்திற்கு தீவைத்துவிட்டு தாய், தந்தை, மகனை தாக்கிய ஐவரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி மக்கள் மறியல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகே உள்ள சஞ்சீவராயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்கிற பாலகிருஷ்ணன் (46). இவருடைய மைத்துனர் சக்திவேல் (37). இவர் மாத்தூரில் வசித்து வருகிறார்.  இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கரும்பு தோட்டத்திற்கு குமார் தீ வைத்துவிட்டதாக மண்டையூர் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது காவலாளர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்படியிருக்க நேற்று மாலை மாத்தூரை சேர்ந்த ஒரு கும்பல் குமாரின் வீடு மற்றும் காரை அடித்து நொறுக்கியது. குமார், அவருடைய தந்தை ரெங்கராஜ், தாயார் சுப்புலட்சுமி ஆகியோரும் தாக்கப்பட்டனர். 

இது தொடர்பாக குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மண்டையூர் காவலாளர்கள் சக்திவேலின் ஆதரவாளர்களான மாத்தூர் பட்டையதார் ரெங்கராஜ், பாலமுத்து, பாலமுருகன் உள்பட ஐந்து பேரை பிடித்து சென்றனர்.

இதனிடையில் மாத்தூர் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழாவுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் ஊர் முக்கியமானவர்களான ரெங்கராஜ் உள்பட 5 பேரையும் காவலாளர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தென்னம்பிள்ளை என்ற இடத்தில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 10 மணி வரை நீடித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கீரனூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். 

தாக்குதலில் காயமடைந்த குமார் உள்பட மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தனது தரப்பைச் சேர்ந்த நாகராஜ், சுரேஷ், பாண்டி ஆகியோரை குமார் தாக்கிவிட்டதாக சக்திவேல் புகார் கொடுத்துள்ளார். அதுபற்றியும் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

click me!