பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் அதிகளவில் பயனடையும் பழங்குடியினர்: மத்திய அமைச்சர் தகவல்!

By Manikanda PrabuFirst Published Jan 10, 2024, 8:17 PM IST
Highlights

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிஸ்வேஸ்வர் துடு கலந்து கொண்டார். கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுமார் ரூ.69 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் கடன் உதவி திட்டங்களை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியின் போது வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Latest Videos

இந்நிகழ்ச்சியில் தபால் துறை, இந்தியன் ஆயில் நிறுவனம், சுகாதாரத்துறை மற்றும் சுய உதவிக் குழுக்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம், இதுவரை மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெறாத மக்கள் அவற்றில் பயன்பெற இணைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு, மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் மாநில அரசுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஜல் சக்தி திட்டம் 73 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சில மாநிலங்களில் 50 முதல் 60 சதவீதம் வரை இத்திட்டம் நிறைவடைந்திருப்பதாக  அவர் கூறினார். 2026 ஆம் ஆண்டில் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இத்திட்டத்தை முழுவமையாக நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட:டு வருவதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு, இவற்றின் மூலம் அனைத்துத் தரப்பினரும் பயனடைவதாகக் கூறினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் பயனளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  பட்டா இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பழங்குடியினர் பெற முடியும் என்பதால், மாநில அரசுகள் இதற்கு ஏற்ப உறுதுணையாக செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாளை மறுநாள் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக மத்திய அரசு, திறன் இந்தியா திட்டம், ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுவதாக இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு கூறினார்.

பின்னர்,  வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண விழிப்புணர்வு வாகனத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர்,  மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய நாட்காட்டியை பொதுமக்களுக்கு  வழங்கினார்.

click me!