'கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' தவெக தலைவர் விஜய்யை ஒருமையில் திட்டிய அமைச்சர்!

Published : Sep 20, 2025, 08:15 PM IST
TRB Rajaa vs Vijay

சுருக்கம்

TVK Vijay: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த விஜய்யை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒருமையில் பேசியுள்ளார். மாலையில் திருவாரூரில் டி.ஆர்.பி.ராஜாவை விஜய் தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜய், இன்று காலை நாகையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாகை மாவட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய விஜய், அதனை சரி செய்யாத திமுக அரசையும் விமர்சித்தார். அதாவது 'தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம்; ஆனால் நவீன வசதியுடன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள், குறிப்பாக அதிக குடிசைகள் கொண்ட மாவட்டமாகவும் நாகப்பட்டினம் தான் உள்ளது' என்று விஜய் பேசினார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த விஜய்

அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, லண்டன் சென்றிருந்த நிலையில், அதனையும் விஜய் விமர்சித்து இருந்தார். ''நாகை மாவட்டத்தில் மீன் சம்பந்தமான எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை வேலைவாய்ப்பு கொண்டு வரும் வகையில் தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா??

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா?

வெளிநாடு சென்று டூர் போயிட்டு வரும்போது எல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்ன சிரித்துக் கொண்டே சொல்கிறார் முதல்வர். சிஎம் சார் மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு முதலீடா? அல்லது உங்க குடும்பத்துடன் முதலீடு வெளிநாட்டுக்கு போகுதா??'' என்று விஜய் பேசி இருந்தார்.

கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது

இந்நிலையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விஜய் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ''சும்மா கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எதாவது நல்ல ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்'' என்றார்.

தவெக தொண்டர்கள் கொந்தளிப்பு

விஜய்யை கண்டவன் என அமைச்சர் பேசியது தவெக தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது. ''எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளுக்கு கருத்துகள் மூலம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும். இப்படி ஒருமையில் பேசுவது அரசியல் தலைவருக்கு அதுவும் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அமைச்சருக்கு அழகல்ல'' என்று தவெகவினர் கூறி வருகின்றனர். நாகையை தொடர்ந்து திருவாரூரில் மாலையில் பிரசாரம் செய்த விஜய், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

திருவாரூரில் அமைச்சரை விளாசிய விஜய்

''இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி (டி.ஆர்.பி ராஜா) இருக்காரு. அவரோட வேலை என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சேவை செய்யுறது. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம புரிய வெக்கனும்'' என்று விஜய் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி