
போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற்கெனவே அறிவித்தபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்சனை குறித்து 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை,
அதே நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நிலைபாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி தற்போது பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது