மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் இலவசமாக பயணம் செய்யலாம்... சலுகைகளை வெளியிட்டது போக்குவரத்துத் துறை!!

By Narendran SFirst Published Jan 27, 2022, 3:46 PM IST
Highlights

பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி மேலும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது

பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி மேலும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. மாற்றுத்  திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மேலாண் இயக்குனர்களுக்கு போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ளது.இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது, பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர்  பேருந்து நிற்பதற்கு என அறியப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த  வேண்டும்.

பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ அல்லது தாண்டியோ நிறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. நடத்துனர் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்றும், ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்திலிருந்து இறங்கி விடக்கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பயணிகள் வேறு யாராவது அமர்ந்து இருந்தால், அவர்களை இருக்கையிலிருந்து எழ செய்து மாற்றுத்திறனாளியை அமர வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ  பேசக்கூடாது. பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணிகளை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்கை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். இந்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையின் அசல் அட்டை கொண்டு, 40 சதவிகிதம் மாற்றுத்திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய இலவச பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி, 75 சதவிகித  பயண கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!