
திருநெல்வேலி
திருநெல்வேலியில் ஒய்வுப் பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், தங்களில் ஒருவரை செத்தது போல படுக்கவைத்து, அவரைச் சுற்றி உட்கார்ந்து மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் களத்தை இழவு வீடாக்கினர்.
“ஓய்வுப் பெற்ற தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் நாளே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும்,
நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் கடந்த 16–ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று 7–வது நாளாக திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் கூடி, ஒப்பாரி பாட்டு பாடி போராட்டம் நடத்தினர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர் ஒருவர் செத்தது போலவும், அவருடைய வீட்டு பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுவது போலவும் போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்திற்கு மண்டல நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வுப் பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், பழனி, காளத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இப்போராட்டம் நடைபெற்ற பகுதி அருகே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி கிளை தர்ணா போராட்டம் நடத்தினர். தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த தர்மன் தலைமை வகித்தார்.
பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சங்கரநாராயணன், சுப்பிரமணியன், ஆவுடையப்பன் ஆகியோர் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இப்போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், முருகன், வேலுச்சாமி, கோமு, குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.