
தஞ்சாவூர்
மனித இனத்தின் அடையாளமான நாட்டுப்புற கலைகளுக்கு பயிற்சி நிலையங்கள் உருவாக்க வேண்டும் என்று குடந்தை அரசு ஆடவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், நாட்டுப்புற இலக்கிய அறிஞருமான பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கும்பகோணம் பழைய பாலக்கரை நீலத்தநல்லூர் சாலையில் உள்ள புனித பீட்டர்ஸ் பள்ளியில் நா.வானமாமலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு தமிழில் “நாட்டுப்புற இலக்கியங்கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கமும் நடைபெற்றது.
கவிஞர் வியாகுலனின் கவிதை நூலை கவிஞர் தேவரசிகன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் மணி வரவேற்றார்.
இந்த கருத்தரங்கிற்கு பேராசிரியர் பிலோமின்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது:
“செவ்வியல் கலை இலக்கியங்களுக்குத் தாயாக விளங்குவது நாட்டுப்புறக் கலை இலக்கியங்களாகும். இன்று செவ்வியல் காப்பியமாக விளங்கும் சிலப்பதிகாரம் தொடக்கத்தில் நாட்டுப்புறக் கதையாகவே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
தொல்காப்பியம், சங்க, பக்தி இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் கூறுகள் மிகுதியாகக் காணப்படுவதன் மூலம் நாட்டுப்புற இலக்கியங்களின் தொன்மையை உணரலாம்.
செவ்வியல் இலக்கியங்கள் சிலருக்கு மட்டுமே புரியும். ஆனால் படித்தவர்கள், பாமரர்கள் என்று வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் எளிமையாக புரியும் படைப்புகளாக விளங்குபவை நாட்டுப்புற இலக்கியங்கள்.எந்தவொரு படைப்பும் பாமரனிடத்தில் சென்று சேர வேண்டும்.
தொடக்க காலத்தில் நாட்டுப்புற இலக்கியங்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவற்றுக்கு சமூகத்தில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தந்த பெருமை தமிழறிஞர்களான மு.அருணாசலம், நா.வானமாமலை, பண்டிதர் நடேச சாஸ்திரி, சஞ்சீவி போன்றோரையே சாரும். நாட்டுப்புற இலக்கிய வளர்ச்சிக்கு நா.வானமாமலையின் பங்களிப்பு மகத்தானதாகும்.
இன்று நாட்டுப்புறவியல் துறை தனித்துறையாக வளர்ந்து நிற்கிறது. நாட்டுப்புறக் கலைகள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
செவ்வியல் கலைகளுக்கு பயிற்சி நிலையங்கள் இருப்பதுபோல, நாட்டுப்புறக் கலைகளுக்கும் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் மனித இனத்தின் அடையாளமே நாட்டுப்புற படைப்புகள்தான். அவற்றைப் போற்றி பாதுகாத்து, இன்றைய இளைய சமுதாயத்திடம் கொண்டுசேர்ப்பது நமது கடமை” என்று அவர் பேசினார்.
குடந்தை அரசு ஆடவர் கல்லூரித் தேர்வு நெறியாளர் குணசேகரன், முன்னாள் தேர்வு நெறியாளர் அரங்கநாதன் மற்றும் பேராசிரியர் சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் செ. கணேசமூர்த்தி நன்றி கூறினார்.