
சிவகங்கை
சிவகங்கையில் குடிகாரர்களால் தினமும் சீண்டப்படும் பெண்கள், குடிப்பதற்கு காரணமான டாஸ்மாக் சாராயக் கடையை அடித்து நொறுக்கினர். கடையின் மீது கல்வீசியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிரான போராட்டம் கடுமையாக தீவிரமடைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலும் பல இடங்களில் சாராயக் கடைக்கு எதிராக மக்கள் தங்களது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர்.
அமைதியான காந்திய வழியில் போராடி போராடி தீர்வு கிடைக்காமல் அளித்துபோன மக்கள் நேதாஜி வழியையும் விட்டுவைக்கவில்லை.
காரைக்குடி கழனிவாசல் பகுதி உ.சிறுவயல் சாலையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பெண்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து முதலில் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லை. பின்பு, போராட்டம் நடத்தினர். அதற்கும் நடவடிக்கை இல்லை.
பெண்கள், சிறுமிகள் என தினமும் குடிகாரர்களால் சீண்டப்பட்டு பாதிக்கபடுவதால் நேற்று அந்தக் கடையை ஊழியர்கள் திறந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் அங்கு திரண்டனர். கடை முன்பாக இருந்த வெற்று சாராய பாட்டில்களை போட்டுடைத்து கடையை நோக்கி கற்களை வீசியும் தாக்கினர்.
அந்த கடை முன்பு கம்பி வலை போடப்பட்டிருந்ததால் சாராய பாட்டில்கள் உடையவில்லை. இதையடுத்து உடனடியாக கடையை ஊழியர்கள் மூடிவிட்டு ஓடினர். அதன் பின்னர் குடிப்பதற்கான இடத்தில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை தூக்கிப் போட்டு உடைத்து அதைச் சுற்றிலும் இருந்த தடுப்புகளை சாய்த்தனர்.
இது குறித்து தகவலறிந்த காவலாளர்கள் அங்கு சென்றதும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்படும் பெண்கள் குடியையும், சாராயக் கடைகளையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.