
சேலம்
சேலத்தில் கூட்டுறவு வங்கி வாசலின் அருகே ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தன.
பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் மாதம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்.
மேலும், பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்ததால், அந்த ரூபாய் நோட்டுகள் கருப்புபணமாக கருதப்பட்டு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை கையில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அறித்த மத்திய அரசு, அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று செல்லாத ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜனார் சாலையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஆத்தூர் கிளை, சிட்டி யூனியன் வங்கி, யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் செயல்படுகின்றன.
நேற்று காலை 8 மணியளவில் கூட்டுறவு வங்கியின் ஆத்தூர் கிளை அலுவலக வாசலின் வலதுபுறத்தில் உள்ள குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடந்தன.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உதவி ஆய்வாளர் மூர்த்தி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துண்டு, துண்டாக கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.
அவையனைத்தும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் என்று தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என காவலாளர்கள் கணித்தனர்.
இதுதொடர்பாக கூட்டுறவு வங்கி அலுவலர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் பற்றி எங்களுக்கு தெரியாது. யாரோ துண்டு, துண்டாக வெட்டி இங்கு கொண்டு வந்து வீசிச்சென்று உள்ளனர் என்றனர்.
இதையடுத்து காவலாளர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை ஒரு பையில் சேகரித்து காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.
வங்கிகளுக்கு வந்த வியாபாரிகள் யாரேனும் இப்படி செய்தனரா? அல்லது வீட்டில் பதுக்கி வைத்திருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை நடவடிக்கைக்கு பயந்து துண்டு, துண்டாக வெட்டி இங்கு கொண்டு வந்து வீசினார்களா? என்று காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.