
சேலம்
ரசிகர்கள் சந்திப்பின்போது ரஜினிகாந்த் அறிவுறுத்தியது போலவே சேலத்தில் ரசிகர்கள் குடிப்பழக்கம், சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டு உறுதிமொழி எடுத்து போருக்குத் தயராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்குக் வழக்கறிஞர் ரஜினி செந்தில் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சீனிவாசபெருமாள், கனகராஜ், குகை அய்யப்பன், வக்கீல் சரவணகுமார் உள்பட ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், ரஜினிகாந்தின் அறிவுரையை ஏற்று சாராயம் குடிப்பது, சிகரெட் அடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களை இனிமேல் செய்ய மாட்டோம் என ரசிகர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்தை விமர்சிக்கும் தலைவர்களை வன்மையாக கண்டிப்பதோடு இதுபோன்ற விமர்சனங்களை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
“ரஜினிகாந்தை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்தால் எந்த தலைவராக இருந்தாலும் அவர்களது உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தப்படும்.
சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தை பற்றி தவறாக சித்தரித்து கருத்துக்களை வெளியிடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து மாவட்டம் முழுவதும் பெயர் பலகை திறந்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து வழக்கறிஞர் ரஜினி செந்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
“ரஜினிகாந்த் கட்டளைக்கு ஏற்பவும், அவரது அறிவுரையை ஏற்றும் ரசிகர்களாகிய நாங்கள் இனிமேல் மது, சிகரெட், புகையிலை உள்ளிட்ட தீய பழக்கங்களை கைவிடுவது என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். மேலும், மது மற்றும் புகையிலையின் தீமைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
சேலம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில் நடைபெற்ற முறைகேடுகளை தலைவர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய தலைவர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் விருப்பம் ஆகும். அதை நிச்சயம் அவர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.
எங்களை பொறுத்தவரையில் ரஜினிகாந்த் கூறியதுபோல், அரசியல் என்னும் போருக்கு தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.