
இராமநாதபுரம்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் 15 ஆயிரத்து 664 பணியிடங்களை அறிவித்ததில் இராமநாதபுரத்தில் மட்டும் எழுத்துத் தேர்வை 11 ஆயிரத்து 805 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழகத்தில் காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள், தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகளில் வெற்றுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் மேற்கண்டத் துறைகளில் வெறுமையாக உள்ள 15 ஆயிரத்து 664 பணியிடங்களை நிரப்ப ஆட்களைத் தேர்வுச் செய்ய எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்த தேர்வில் பங்கேற்பதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 439 பெண்களும், 11 ஆயிரத்து 732 ஆண்களுமாக மொத்தம் 14 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய மூன்று இடங்களில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையம் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
தேர்வு எழுத வந்தவர்கள் கொண்டுவந்த செல்போன், எலக்ட்ரானிக் கடிகாரம், பைகள் உள்ளிட்டப் பொருட்களை காவலாளர்கள் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்து தேர்வு முடிந்தவுடன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தனர்.
இம்மாவட்டத்தில் நடைபெற்ற இந்த எழுத்துத் தேர்விற்காக ஆயிரத்து 300 காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தத் தேர்வில் நேற்று 11 ஆயிரத்து 805 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 500 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 366 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
தேர்வு மையங்களுக்கு டி.ஐ.ஜி.ஆனந்த்குமார் சோமானி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் நேரில் சென்றுப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.