
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், கோபிச்செட்டிபாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு, எடப்பாடி பழனிசாமி வந்தபோது, வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
இவ்வளவு பெரிய கூட்ட நெரிசலுக்கு மத்தியில், பிரசாரக் கூட்டத்தின் இடையே நின்றுகொண்டிருந்த ஒரு நபர், திடீரென மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் சோகமான தகவலைத் தெரிவித்தனர்.
சமீபத்தில், நடிகர் விஜய்யின் கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில், கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தத் துயர சம்பவம் அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரக் கூட்டங்களில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.