
கோபிச்செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்ற பரப்புரையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை மறைமுகமாக மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"உங்களுக்கு அடையாளம் கொடுத்ததும் பதவி கொடுத்ததும் அ.தி.மு.க." என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
"அவர் ஓட்டு வாங்க உங்களை (மக்களை) அணுகினார்; ஆனால், ராஜினாமா செய்யும்போது உங்களைக் கேட்டாரா?" என்று கேள்வி எழுப்பிய பழனிசாமி, செங்கோட்டையன் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்தார் என்று தெரிவித்தார்.
மேலும், “அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை. அந்தக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார். ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?” உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக." என்றும் பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி விளக்கினார். "கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று தலைமைக்கே கெடு விதிக்கிறார். அவரை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
"அவர் இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அ.தி.மு.க.வுக்குள் இருந்தே எதிராக செயல்பட்டவர். அவர் தி.மு.க.வின் B டீமாக செயல்பட்டவர் என்பதால்தான் அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம்," என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது அ.தி.மு.க. தலைமை எடுத்துள்ள நிலைப்பாட்டை, இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.