
சிவகங்கை மாவட்டம், கும்பங்குடி பாலம் அருகே இன்று (நவம்பர் 30, 2025) நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
காரைக்குடியிலிருந்து புறப்பட்ட ஒரு அரசுப் பேருந்தும், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்தும் கும்பங்குடி பாலம் அருகே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், தென்காசியில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில், தற்போது சிவகங்கையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.