
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழக கடலோர பகுதிகள் வழியாக நகர்ந்து வருகிறது. சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில், இந்த புயல் வலுவிழந்து விட்டதாக கூறப்படுகிறது. டிட்வா புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து சென்னை எழிலகம் பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரவோடு இரவாக ஆய்வு செய்தார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழை பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நிவாரண பணிகள் குறித்து உதயநிதி ஆய்வு செய்தார். கனமழை தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலம் வரும் புகார்களையும் ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''புயல் -கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தோம். கனமழை நேரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
இப்போது டிட்வா புயல் எங்கு உள்ளது?
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கிமீ நகர்ந்த நிலையில், இப்போது 7 கிமீ ஆக அதிகரித்து நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் சென்னையில் இருந்து 220 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 170 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 90 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.