
சென்னை எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் மத்திய அரசின் பெல் (BHEL) நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது.
முகப்புப் பகுதியில் (Front Portion) அமைக்கப்பட்ட சாரம் திடீரென இடிந்து சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்த முதற்கட்டத் தகவலின்படி, உயிரிழந்த 9 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இந்த விபத்தில் மேலும் சில தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.