
கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம் - ஊட்டி நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி முதல் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் சீன பெருஞ்சுவரை போல நீண்டுக் கொண்டே போகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி முதலே கடுமையான போக்குவரத்து நிலவுகிறது. இப்போது வரை இந்த போக்குவரத்து சீரமைக்கப்படாமல் இருக்கிறது.
வாகனங்கள் சீனப் பெருஞ்சுவரை போல நீண்டுக் கொண்டே செல்வதால், வாகன ஓட்டிகள், பயணிகள் என அனைவரும் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் வரிசைக் கட்டி நிற்கின்றன. எப்படா வண்டி கிளம்பும் என்ற மனநிலையில் பேருந்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்த பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என அனைவரும் வெளியே வந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஊட்டிப் பகுதி, சுற்றி பசுமையாக இருக்கும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நின்றுக் கொண்டிருப்பதால் குளுமையான மனநிலையை அனுபவிக்கின்றனர் மக்கள். இதுவே, வெயில் கொளுத்தும் பகுதியாக இருந்திருந்தால் நிலைமை தலைகீழ்தான்.
கடந்த 5 மணி நேரமாக வாகனம் எதுவும் இருந்த இடத்தைவிட்டு நகராமல் இருக்கிறது.
இப்படி ஒரு அனுபவத்தை சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் என அனைவரும் அனுபவிக்கின்றனர். மேலும், போக்குவரத்தைச் சிக்கலை சீரமைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிகை வைத்துள்ளனர்.