
தமிழகத்தில் பொதுமக்களின் பொழுது போக்குக்காக பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதில், சிறுவர்களுக்கான சேனல்கள், விளையாட்டு, சீரியல், செய்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தனித்தனி சேனல்கள் உள்ளன.
இதுபோன்ற சேனல்களில் நிகழ்ச்சிகளை பார்க்க ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒரு கட்டணம் என தனியார் கேபிள் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இதனை தடுக்க அரசு சார்பில் கேபிள் நிறுவனம் தொடங்க முடிவு செய்தது. அதன்படி விரைவில் ‘டிஜிட்டல் கேபிள்’ தொடங்கப்பட உள்ளது.
இந்த டிஜிட்டல் சேவையில் மாதம் ரூ.125 செலுத்தினால், 200 சேனல்கள் வரை நிகழ்ச்சிகளை வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான உரிமத்தை பலகட்ட போராட்டத்துக்கு பின், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்துக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான, 'டிராய்' வழங்கியுள்ளது.
மேலும், வரும் ஜூலை 17ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்'களை வழங்காவிட்டால், டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் எனவும் கண்டிஷன் வைத்துள்ளது.
இதைதொடர்ந்து தமிழக அரசு கேபிள் நிறுவனம் சார்பில், 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது. டிஜிட்டல் சேவை மூலமாக, தனியார் நிறுவனங்களை விட, அதிக சேனல்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கேபிள் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கேபிள் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.130 கட்டணத்தில் குறைந்தது, 100 சேனல்கள் வழங்க வேண்டும் என டிராய் அறிவித்துள்ளது.
அதற்கு அதிகமான சேனல்களை வழங்கு விரும்பினால் கூடுதல் செலவு செய்து, பெற்று கொள்ளலாம். அதன் அடிப்படையில், அரசு கேபிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.125க்கு வழங்க இருக்கிறோம். அதில், 200 சேனல்களை பார்க்கலாம்; 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக தருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.