
ஈரோடு
ஈரோட்டில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் மல்டிகிரைன் கேக், கறிவேப்பிலை கீர் போன்ற உணவுகள் மக்களுக்கு விருந்தாக அளிக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கொங்கு வேளாளர் இளைஞர் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் தலைவர் சி.முத்துசாமி தலைமைத் தாங்கினார்.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உணவுத் திருவிழாவைத் தொடக்கி வைத்தார்.
பெருந்துறை இயற்கை உணவியல் ஆலோசகர் நித்யாதேவி, விஜயலட்சுமி ஆகியோர் இயற்கை உணவு வகைகள் குறித்தும், சகுந்தலா, திலகவதி, நாகரத்தினம், வித்யாதேவி ஆகியோர் பாரம்பரிய உணவுகளைத் தயாரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
இதனையொட்டி, மக்களுக்கு பாரம்பரிய உணவுகளான மல்டிகிரைன் கேக், கறிவேப்பிலை கீர், குதிரைவாலி தக்காளி பாத், தயிர் பச்சடி, சாமை பொங்கல், வல்லாரை சூப், சீரக பருப்பு மிளகு சாதம் போன்ற உணவுகளுடன் விருந்தளிக்கப்பட்டது.
இதில், பொருளாளர் பி.திருமலை, துணைத் தலைவர்கள் பூசப்பன், ஆறுமுகம், முன்னாள் துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சின்னசாமி, சங்க முன்னாள் தலைவர் வேலுசாமி, துணைச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.