
கிருஷ்ணகிரி
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியேக் கிடக்கும் ஒகேனக்கல் தொங்கு பாலத்தை இருபுறமும் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிற்கு சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிலிகுண்டுலு, நாட்ராம்பாளையம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகள் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள். இந்தப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது வறண்டுக் கிடந்த அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று முன்தினம் வரை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி வினாடிக்கு 950 கனஅடி தண்ணீர் வந்தது. இது மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1100 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஐந்தருவி பகுதியில் ஒரு சில அருவிகளில் மட்டுமே தண்ணீர் கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், அவர்கள் பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) அணிந்து பரிசலில் சென்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியது: “பரிசலில் சென்றால் மட்டுமே சினிபால்சில் குளிக்க முடிகிறது. இதனால் தங்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. தொங்கு பாலத்தின் வழியாக செல்ல அனுமதித்தால் ரூ.5 மட்டும் கட்டணம் செலுத்தி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசிக்கலாம்.
மேலும் பாலத்தின் வழியாக சினிபால்சுக்கும் சென்று குளிக்கலாம். 2 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே இருக்கும் தொங்கு பாலத்தை இருபுறமும் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.