
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும், அவரது வருகையை நாடே எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இந்தி திரைப்பட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் இறுதிநாள் அன்று அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.
இந்த நிலையில், இந்தி திரைப்பட நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்கா நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக வடிவமைக்க ரஜினி அரசியலில் இணைவதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தமிழ்நாட்டின் டைட்டானிக் கதாநாயகனே, இந்தியாவின் மகனே, அன்புள்ள ரஜினிகாந்த், நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு இதுவே சரியான மற்றும் உச்சக்கட்ட தருணம் என தெரிவித்துள்ளார்.
உங்களது ஆக்கப்பூர்வமான அரசியல் பிரவேசத்தை காண நாடே ஆவலுடன் காத்திருக்கிறது. உங்களுடைய மக்கள் மற்றும் நாட்டு மக்களின் எதிர்கால வாழ்க்கையை வடிவமைக்க அரசியலுக்கு வாருங்கள். ஒரு நல்ல நண்பனாக, நலம் விரும்பியாக உங்களது ஆதரவாளராக, வழிகாட்டியாக எப்பொழுதும் நான் உங்களுடன் இருப்பேன். இப்பொழுதும் இருக்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.