
கரூர்
பிரதமரை சந்தித்து, முதல்வர் இபிஎஸ் கேட்ட ரூ.71 ஆயிரம் கோடியை தருவதென்பது நடைமுறை சாத்தியமற்றது” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூரில் பாஜக வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் கோடங்கிப்பட்டியில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தேசிய நெடுஞ்சாலை 67–ல் கரூர் – திருச்சி புறவழிச்சாலையில் ஈசநத்தம் பிரிவு பகுதியில் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் 17 விபத்துகள் நடந்ததாக தெரிவித்தனர்.
மக்கள் பாதுகாப்பாக இந்த இடத்தைக் கடப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு செய்யப்படுகிறது.
அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தலையிடுவது இல்லை.
அதிமுக ஆட்சி, கட்சியை அவர்கள் வழி நடத்துகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடியை முதல்வர் என்ற முறையில் சந்தித்தார். வறட்சி நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடி உள்ளிட்ட ரூ.71 ஆயிரம் கோடியை கோரியுள்ளார். இது நடைமுறை சாத்தியமற்றது” என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து வீரராக்கியம், மண்மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார். அப்போது கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், கரூர் தாசில்தார் சக்திவேல், பா.ஜ.க. இணை கோட்ட பொறுப்பாளர் சிவசாமி, கரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.