
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுகப்படுவது முதல் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும் இருக்கும் பிரச்சனைகளை புட்டு புட்டு வைத்தனர் விவசாயிகள். அனைத்தையும் கேட்ட ஆட்சியர் அதற்கு தீர்வு கண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைப்பெற்ற இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை வகித்தார்.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளங்கோ, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்கப் பிரதிநிதிகள் பத்மதாஸ், புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, முருகேசபிள்ளை உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இக்கூட்டம் தொடங்கியதும் அணைகளில் உள்ள நீர்மட்டம், மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து குமரி மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்களின் விவரம் விளக்கப்பட்டது.
பின்னர், அதிகாரிகள் குளங்களில் வண்டல் மண் எடுக்க அரசு அறிவித்துள்ள புதிய ஆணை குறித்துத் தெரிவித்தனர். இதற்கு விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக விவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கூட்டத்தில் பேசிய விவசாயிகள், “உரிய ஆவணங்களுடன் வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தால் அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பு தெரிவிப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் வண்டல் மண்ணை எடுத்து விற்பனைச் செய்யும் நிலை உள்ளது என்றும், இதனால் விவசாயிகள் ஒரு டெம்போ மண்ணை ரூ.750 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
குளங்களில் வண்டல் மண் எடுக்க அரசின் புதிய ஆணைப்படி பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற வேண்டியுள்ளது. எனவே பிற மாவட்டங்களைப் போன்று குமரி மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரையும் ஒரே இடத்துக்கு வரவழைத்து அங்கேயே விவசாயிகள் வண்டல் மண் எடுக்க ஆணை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் வண்டல்மண் எடுப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி சரமாரியாக புகார்களை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், “இன்னும் ஒருசில தினங்களில் 4 தாலுகாக்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தி, அதில் அனைத்து துறை அதிகாரிகளையும் பங்கேற்கச் செய்து, விவசாயிகள் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கொடுக்கும் விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.