அகில இந்திய அளவிலான கூடைப்பந்து; வெற்றிப் பெற்றவர்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்…

First Published May 26, 2017, 9:02 AM IST
Highlights
All India level basketball MR Vijayabaskar presented gifts to the winners ...


கரூர்

கரூரில் நடைபெற்ற ஆண்களுக்கான அகில இந்திய அளவிலான 59–வது கூடைப்பந்து போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்.

ஆண்களுக்கான அகில இந்திய அளவிலான 59–வது கூடைப்பந்து போட்டி கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் கரூரில் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.

கடந்த 21–ஆம் தேதி தொடங்கிய இதில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), டெல்லி மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.), மராட்டிய மாநிலம் லோனாவிலா இந்தியன் கப்பற்படை, சென்னை இரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை (ஐ.சி.எப்.), பஞ்சாப் மாநிலம் கபூர்தலா இரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை (ஆர்.சி.எப்.), டெல்லி விமானப்படை, உத்தரபிரேதச மாநிலம் வாரணாசி டீசல் என்ஜின் பராமரிப்பு பணிமனை (டி.எல்.டபிள்யூ.), சென்னை சுங்கத்துறை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இந்தப் போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைப்பெற்றது.

சென்னை சுங்கத்துறை அணியும், டெல்லி விமானப்படை அணிவும் மோதியதில் டெல்லி விமானப்படை அணி 87 புள்ளிகள் பெற்று முதலிடமும், 84 புள்ளிகள் பெற்ற சென்னை சுங்கத்துறை 2–ஆம் இடமும் பெற்றது.

சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3–வது இடமும், இந்திய கப்பற்படை அணி 4–ஆம் இடமும் பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இரவு நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுனர் வி.என்.சி.பாஸ்கர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதில் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2–ஆம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3–ஆம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.25 ஆயிரமும், 4–ஆம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் வைஸ்யா வங்கி இயக்குனர் ஆதி சூர்யநாராயணன், குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை அமைப்பாளர் பி.தங்கராசு, கரூர் மாவட்ட அதிமுக அம்மா அணி துணைச் செயலாளர் பி.சிவசாமி, நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

tags
click me!