மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

By Narendran SFirst Published May 19, 2022, 3:49 PM IST
Highlights

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அருவியில் கடந்த இரு தினங்களாக பெய்யும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது, அருவியில் நீர்வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதனிடையே கோடை விடுமுறையையொட்டி அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள், தடை காரணமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயில் வாட்டி வதைத்தது.

பின்னர் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

click me!