
குமுளி
மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் சில்லைறைத் தேடி சுற்றிக் கொண்டிருந்தனர்.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததைத் தொடர்ந்து மக்களிடையே அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறு, குமுளி, மறையூர், வண்டிப்பெரியார், வட்டவடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது.
மூணாறு, குமுளி, வாகமன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.
குமுளிக்கு படகுகுழாமில், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று வனத்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் படகுசவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஓட்டல்கள், வணிக வளாகங்களில், கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தன.
பேருந்துகளில், நடத்துனர்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுத்தனர். இதனால் பயணிகள், நடத்துனர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடைகளிலும் வியாபாரிகள் வாங்கவில்லை. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களான பால், மளிகைப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.
இப்படி சென்ற இடமெல்லாம் நோட்டுகள் செல்லாது என்று அலையவிட்டதால், நோட்டுகள் எங்குச் செல்லுபடியாகும் என்று சுற்றுலாப் பயணிகள் சுற்றிக் கொண்டே இருந்தனர்.