
தேனி
தேனியில் முறையான ஆவணங்கள் இல்லாத இரண்டு ஸ்கேன் மையங்களுக்கு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சீல் வைத்தார்.
தேனி – பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் எடுக்கும் மையத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மருத்துவர் செல்வராஜ் தலைமையில், சென்னையில் இருந்து வந்துள்ள போலி மருத்துவர் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினரும், தேனி மாவட்டத்தில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகளும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அந்த ஸ்கேன் மையத்தில் முறையான ஆவணங்கள் பராமரிக்கவில்லை. எனவே, அந்த மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மற்றொரு ஸ்கேன் எடுக்கும் மையத்திலும் அதிகாரிகள் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினர். அங்கும் முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருந்ததால் அந்த மையத்திர்கும் சீல் வைக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட இரு ஸ்கேன் மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மருத்துவர் செல்வராஜ் தெரிவித்தார்.