பலத்த சூறைக்காற்றால் தூக்கி அடிக்கப்பட்ட தகர மேற்கூரை; மினி பேருந்தின் மீது விழுந்ததால் மூவர் காயம்…

First Published May 30, 2017, 9:15 AM IST
Highlights
torn fell on the roof of mini bus Three injured


திருநெல்வேலி

திருநெல்வேலியில் வீசிய பலத்த சூறைக்காற்றால் தனியார் கட்டிடத்தின் தகர மேற்கூரை தூக்கி அடிக்கப்பட்டு மினி பேருந்தின் மீது விழுந்ததால் மூவர் காயம் அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் நேற்றுக் காலையில் வெயில் கொளுத்தியது. ஆனால், மதியம் ஒரு மணிக்கு மேல் வெயில் குறைந்து கருமேகம் சூழ்ந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் குளிர் காற்று சூறைக் காற்றாக உருவெடுத்த்து.

அடித்த பலமான சூறைக்காற்றுக்கு விளம்பர பதாகைகள், மரங்கள் தூக்கி அடிக்கப்பட்டன. இதில் திசையன்விளை பேருந்து நிலையத்தின் மேல்புறம் உள்ள தனியார் மூன்று மாடி கட்டிடத்தின் தகரத்திலான மேற்கூரையானது இரும்பு கம்பியோடு பெயர்ந்து தூக்கி வீசப்பட்டு பேருந்து நிலையத்தில் விழுந்தது.

இதில், அங்கு நின்றுக் கொண்டிருந்த மினி பேருந்தின் மீது பலமாக விழுந்தபோது, ஏற்பட்ட அதிபயங்கர சத்தத்தைக் கேட்டும், பேருந்தின் மீது விழுந்ததைக் கண்டும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பேருந்தின் மேற்கூரையை பெயர்த்துக் கொண்டு தகரம் உள்ளே விழுந்ததில், காளிகுமாரபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரைக்கு (63) பலத்த காயமும், ராமன்குடியைச் சேர்ந்த பாண்டி மகள் சிவரஞ்சினி (17), வல்லான்விளையை சேர்ந்த செல்வன் மகள் பிரவீனா (17) ஆகியோருக்கு இலேசான காயமடைந்தனர். பேருந்தில் இருந்த மேலும் சிலரும் லேசான சிராய்ப்பு ஆளானார்கள். இவர்களை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு, திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த தகவலறிந்ததும் இன்பதுரை எம்.எல்.ஏ. மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஒன்றியச் செயலாளர் ராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

click me!