
திருநெல்வேலி
திருநெல்வேலியில் நிரந்தரமாக பூட்டப்படும் என்று கூறிவிட்டு திறக்க முற்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைக்கு பூட்டு போட்டும், கடைக்கு எதிரில் சமையல் செய்து சாப்பிட்டும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ளது மேலப்பாவூர். இங்கிருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்படுகிறது.
இந்தச் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கைகள் அளித்தும், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் நடந்தப் போராட்டத்தின்போது பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் மே 26–ஆம் தேதிக்குள் இந்த டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூடிவிடுகிறோம் என்று எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் கூறிய நாளில் கடை மூடப்படவில்லை. மேலும், கடையை திறக்கவும் வழக்கம்போல ஊழியர்கள் வந்தனர்.
இதுகுறித்த தகவலை அறிந்த அந்தப் பகுதி மக்கள் மறியல் செய்து கடையைத் திறக்கவிடாமல் தடுத்தனர். இந்த சாராயக் கடையை மூடி விடுவதாக மூன்று முறை தெரிவித்தும், கடையை மூடாமல் திறக்க முயன்றனர். இதனால் மக்கள் கடைக்கு பூட்டுப் போட்டும், மேலும் பெண்கள் சிலர் கடை எதிரில் பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிட்டும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அந்தப் பகுதி மாணவ, மாணவிகள் பலர் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூடகோரி நேரில் மனு கொடுத்தனர்.
பின்னர்., ஊருக்குத் திரும்பிய அவர்கள் கடைமுன்பு கூடி அந்த கடைக்கு மேலும் ஒரு பூட்டுப் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இந்தக் கடை நிரந்தரமாக மூடபட வேண்டும் என்றும், எங்கள் பகுதியில் எந்த இடத்திலும் டாஸ்மார்க் சாராயக் கடை இருக்கக் கூடாது என்றும் முழக்கமிட்டனர்.