
திருச்சி
தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தும் மத்திய பாஜக அரசைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
திருச்சியில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒற்றை தீர்ப்பாயம் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்,
இந்தியைத் திணித்து தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்க கூடாது,
மதுரை அருகே கீழடியில் தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை மூடி மறைக்க முயலாமல் தொல்லியல் ஆய்வை மத்திய அரசுத் தொடர்ந்து நடத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (அதாவது நாளை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் 24 தமிழ் தேசிய அமைப்புகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் நாம் காவிரி நீருக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய போராட்டம், அதன் மூலம் பெற்ற உரிமைகள் அனைத்தும் செல்லாததாகி விடும். எனவே இதனை செயல்படுத்த விடக்கூடாது.
தமிழகத்தில் ஒரு குழப்பமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
தமிழகத்தில் மட்டும் அல்ல, பாரதீய ஜனதா அரசு இல்லாத அனைத்து மாநிலங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் குழப்பம் ஏற்படும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத சட்டம். விவசாயிகள் வைத்திருக்கும் மாடுகளை அவை உழைக்க தகுதி இழந்த பின்னர் இறைச்சிக்காகதான் விற்பனை செய்வார்கள். இந்தத் தடைச் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படும். இந்த சட்டம் மக்களின் அன்றாட வாழ்வில் பல தடைகளை ஏற்படுத்தும். எனவே, இந்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் சீரழிந்து விட்டதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இப்படிச் சொல்லி அவர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறார்கள். தமிழகத்தில் பாரதீய ஜனதா காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பாரதீய ஜனதா கால் ஊன்றினால் மிகப்பெரிய சீரழிவு ஏற்படும் என்பதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.