
திருச்சி
திருச்சியில் போராட்டக்காரர்கள் மக்களுக்கு மாட்டுக்கறி விநியோகித்தும், மோடியின் உருவபொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் 96 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவுப் பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவால் விவசாயிகள் மற்றும் தலீத் என பெரும்பான்மையானோர் பாதிக்கப்படுவர் என்றும், தடை உத்தரவை பிறப்பித்த மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவலாளர்கள் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து காவலாளர்களின் தடையை மீறி நேற்று காலை திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் உபைதுல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல்ரகீம், மாவட்டப் பொருளாளர் அய்யூப்கான், த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் உதுமான்அலி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று முழக்கமிட்டனர்.
அதுமட்டுமின்றி, அவர்கள் மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து முழக்கம் எழுப்பிக் கொண்டே சாலையின் நடுவில் வந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி ஏற்கனவே தகவலறிந்த காவல் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காவலாளர்கள் போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்கள் மாட்டுக்கறியை பைகளில் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகித்தனர்.
இதனைக் கண்ட காவலாளர்கள் சாக்குப் பையில் இருந்த மாட்டு இறைச்சியை பறித்தபோது ஏற்பட்ட மோதலில் மாட்டு இறைச்சி சாலையில் சிதறியது.
தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மோடியின் உருவபொம்மையையும், பா.ஜனதா கட்சி கொடியையும் எரிக்க முயற்சித்த உடனே அவற்றை எரிக்கவிடாமல் காவலாளர்கள் விரைந்து பறித்தனர். இதனால் அங்கு காவலாளர்களுடம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 96 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.