
தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்திருந்தது போல தமிழகத்தில் நாளை முதல் லாரிகள் ஓடாது என்பதால் வட மாநிலங்களுக்கான லாரிகளில் சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
“வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியது.
15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது
மற்றும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது”
இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறக்கோரி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நாளை முதல் லாரிகள் ஓடாது என ஏற்கனவே அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 30 இலட்சம் லாரிகள் இயக்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, லாரிகளில் சரக்கு புக்கிங் செய்வதும் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு லாரி புக்கிங் முகவர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் கூறியது:
“தென்னிந்திய அளவில் நாளை முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடக்கிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தையொட்டி, வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான லாரிகளில் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு, சிமெண்டு, தளவாட சாமான்கள், மஞ்சள், ஜவுளி வகைகள், உணவு பொருட்கள் என தினமும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடையும்.
சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டதையொட்டி மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கான சுமார் 50 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டன.
எனவே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் வகையில், பொதுமக்கள் நலன்கருதி மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்” என்று அவர் கூறினார்.