
சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியிடம் ரூ.700 கேட்டு தராததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்புக் கம்பியால் அடித்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சத்யராஜ். இவருடைய மனைவி சத்யா (26). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
மறுபடியும் பிரசவித்த சத்யா பிரசவம் பார்க்க கடந்த 12–ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சத்யாவின் உறவினர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் 20–க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து முற்றுகைப் பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனை டீன் கனகராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சத்யாவிடம் ரூ.700 கேட்டு, அங்கிருந்த செவிலியர் ஒருவர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் தொந்தரவு செய்துள்ளனர். பணம் தராததால் தகாத வார்த்தைகளால் திட்டியும், குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியால் சத்யாவை அடித்தும் உள்ளனர்.
அதன்பின்னர், சத்யாவின் உறவினர்கள் ரூ.300 கொடுத்தோம். அதை வாங்கிக் கொண்டும், அவர்கள் அடங்கவில்லை. பணத்தை வாங்கிய பின்பும் சத்யாவை திட்டினர்.
எனவே, பிரசவத்திற்கு வந்த இடத்தில் கர்ப்பிணியிடம் பணம் கேட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் டீன் கனகராஜ் தெரிவித்தார்.
இதில் அமைதியடைந்த உறவினர்கள் அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.