
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
டீசல் மீதான வாட் வரி உயர்வு, காப்பீட்டு கட்டணம் அதிகரிப்பு, பழைய வாகனங்கள் மீதான கட்டுப்பாடு உள்ளிடவைகளைக் கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புடைய வர்த்தகம் அடியோடு முடங்கியுள்ளது. காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதற்கிடையே லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமையல் எரிவாயு லாரிகளும் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று மீண்டும் எம்.ஆர்.பாஸ்கர் தலைமையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.