
திண்டுக்கல்லில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொட்டிகள் சுத்தம் செய்யப்படவில்லை என்று மக்கள் புகார் அளித்தும் அலட்சியமாக இருந்த அதிகாரிகளால் 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நத்தப்பட்டி ஊராட்சி கருப்பத்தேவனூரில் கிராமம் உள்ளது. இங்கு 150–க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த ஊருக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீரை மேல்நிலை தொட்டியிலும், சிறிய குடிநீர் தொட்டியிலும் சேகரிக்கப்படுகிறது. பின்னர், மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தக் குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து, நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. மேலும், சிறிய குடிநீர்த் தொட்டி உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குடிநீர் தொட்டிகளில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தக் குடிநீரை எடுத்துக் கொண்டு சென்று, வீட்டில் குடித்தவர்களுக்கு வாந்தி மயக்க ஏற்பட்டது. அந்த ஊரில் மொத்தம் 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அனைவரும் உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் பலமுறை தொட்டிகளை சுத்தம் செய்யக் கோரியும், கழிநீர் கலப்பதை தடுக்க கூறியும் அளித்த புகார்களை அலட்சியப்படுத்திய அதிகார்களால் 30 பேர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி எங்கும் அலறல் சத்தங்களும், பரபரப்பும் காணப்பட்டது.