
திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடியதால், மீதம் ஊருக்குள் இருக்கும் சாராயக் கடைகளை நோக்கி குடிகாரர்கள் படையெடுத்தனர். இரவு கடைகள் மூடும்வரை கூட்டம் அலைமோதியது.
நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டன.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 104 டாஸ்மாக் சாராயக் கடைகளும், 15 தனியார் பார்களும் மூடப்பட்டன. மொத்தம் இருக்கும் 160 சாராயக் கடைகளில் 104 கடைகள் மூடப்பட்டதால் மீதமுள்ள 56 கடைகளில்தா இனி குடிகாரர்கள் சாராயம் வாங்கி குடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், அந்த 56 கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் சர்க்கரையைத் தேடி வரும் எறும்பை போல மொய்த்தது. சில இடங்களில் வரிசையில் நின்றால்தான் சாராயம் தர முடியும் என்று கட்டளைப் போடப்பட்டது. அப்போதும் கூட, எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து சாராயம் வாங்கி செல்வேன் என்ற லட்சியத்தோடு குடிகாரர்கள் காத்திருந்த கதைகளும் இங்கு நடந்தது.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, இங்குள்ள கடைகள் அனைத்தும் 12 மணிக்கு திறக்கப்பட்டதில் இருந்த இரவு மூடப்பட்டதும் வரை ரணகளமாகவே காட்சியளித்தது.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிட்டதால் சாராய விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ரூ.3 கோடி வரை விற்பனை நடக்கும். ஆனால், நேற்று முன்தினம் நிலவரப்படி ரூ.1 கோடி மட்டுமே சாராயம் விற்பனையாகி இருக்கிறது. இதனால், அரசிற்கு 2 கோடி ரூபாய் நட்டம் என்றுப் பார்த்தாலும், ஏழை மக்களுக்கு 2 கோடி ரூபாய் லாபம் என்பதும் உண்மையே.
இதற்கிடையே, மூடப்பட்ட சாராயக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றாமல், நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், மூடப்பட்ட கடைகள் அனைத்தும் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்பதே நிதர்சனம். தங்க முட்டையிடும் வாத்துகள் போன்ற சாராயக் கடைகளை அரசாவது மூடும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மூடப்பட்ட சாராயக் கடைகளை ஒரு வாரத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அனைத்து கடைகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்படும்’ என்று உறுதியுடன் தெரிவித்தார்.