
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் அளித்துவரும் ஏரிகளில் தற்போது நீர் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில், இன்றும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது என்றார்.
அதிகபட்சமாக எண்ணூர், செம்பரம்பாக்கத்தில் 9 செ.மீ. மழையும், பூந்தமல்லியில் 7 செ.மீ. மழையும், திருவள்ளுர், சென்னை விமான நிலையத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.