Tamilnadu Rain : 10 மாவட்டங்களில் கனமழை.. வெளுத்து வாங்க போகிறது..எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

By Raghupati RFirst Published Dec 6, 2021, 2:00 PM IST
Highlights

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்தநிலையில் இம்மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிசம்பர் 6)  திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

பிற தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை (டிசம்பர் 7) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிசம்பர் 8 ஆம் தேதி (புதன் கிழமை) கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 9ஆம் தேதி (வியாழன்) அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 10ஆம் தேதி (வெள்ளி) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் இன்று பாரிமுனை,ராயபுரம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் கீழ்ப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

click me!