Omicron : தமிழகத்தில் பள்ளிகள் ‘மீண்டும்’ மூடல்..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..

By Raghupati RFirst Published Dec 6, 2021, 10:36 AM IST
Highlights

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

தென் ஆப்ரிக்கா கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.  தற்போது நாடு முழுவதும் உள்ள எல்லா விமான நிலையங்களிலும்  கடுமையான சோதனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சததை கடந்துள்ளது. இது தவிர வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கம், தீவிர கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் வேலையிழந்தும், தொழில் நலிவுற்றும் ஏராளமானோர் பொருளாதார ரீதியில் சிதைவுற்றுள்ளனர்.

இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது, இனி இயல்பு நிலைக்கு திரும்பலாம் என பெருமூச்சு விடுவதற்குள் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா திரிபு வந்து இருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

எனினும், ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் ஆகிய மாதங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தஞ்சாவூரில்  நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘ஒமைக்ரான் தொடர்பாக சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வரவில்லை. பொதுவாக பொதுமுடக்கத் தளர்வை அமல்படுத்தும்போது,  மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை’ என்று கூறினார்.

click me!