
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சீசனில் அதாவது வடகிழக்கு பருவ மழையின்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மற்றும் ஒரு சில டெல்டா மாவட்டங்ககில் மட்டுமே ஓரளவு மழை பெய்தது. மற்ற மாவட்டங்கள் இன்று வரை வறண்டு காணப்படுவதோடு, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
கடந்த மாதத்திலேயே வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்துவிட்டதால் தமிழகத்தில் பகலில் கடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. மழையே கடந்த இரண்டு மாதங்களாக எங்கும் இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும், இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், உள்ளட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம்,வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. மதுரையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது . இதே போன்று கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் சேலம்,திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.