
திருவண்ணாமலை
ஆரணியில் ரூ.10 கோடி செலவில் பல்வேறு விளையாட்டு அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ.75 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை, சுற்றுச்சுவர் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவந்தனர்.
அவர்கள், ஆரணி நகராட்சிக்குச் சொந்தமான டென்னிஸ் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அதன்பின்னர், விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "ஆரணியில் டென்னிஸ் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் தற்போது நகராட்சியால் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ரூ.10 கோடி செலவில் நீச்சல் குளம், இறகு பந்து அரங்கம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், சதுரங்க விளையாட்டு உள்ளிட்ட அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இரா.ஜெயக்குமாரி, நகராட்சி ஆணையாளர் செளந்தர்ராஜன்,
முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகர நிர்வாகி பாரிபாபு, மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன் உள்பட அதிமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.