
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நடத்திய விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் 20 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.
"புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தினர்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 2074 பேரில் 1661 பேர் புதன்கிழமை பணியில் ஈடுபட்டனர். 413 பேர் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 20 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 80 சதவீதம் பேர் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் -2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் பங்கேற்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.வேடியப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலர் மு.அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில், சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று ஆட்சியரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.