
கோவை
கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று நடக்க இருந்த அனைத்து போராட்டங்களும் இரத்து செய்யப்பட்டன.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) ஆகிய கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்த காவலாளர்கள் அனுமதி அளித்து இருந்தனர்.
மேலும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரயில் மறியல் போராட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டங்கள் இன்று நடக்க இருந்தன. ஆனால் அவற்றுக்கு காவலாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
இதேபோல் இன்று பாரத் சேனா கட்சி சார்பில் கிராஸ்கட் சாலையில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் இருந்து அயோத்திக்கு செங்கற்கள் கொண்டு செல்லும் போராட்டம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி விவேகானந்தர் பேரவை சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவற்றுக்கு காவலாளர்கள் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து கோவையில் இன்று நடக்க இருந்த போராட்டங்கள், முற்றுகை ஆகியவற்றை அந்தந்த அமைப்புகளே ரத்து செய்துவிட்டன.
இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் உக்கடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இப்ராகிம் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் அதை கண்டித்து தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இயற்கை எய்தினார்.
இதைத்தொடர்ந்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற இருந்த போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் காதர் ஹுசைன், ஜாபர் சாதிக், அப்துல்பஷீர், செய்தி தொடர்பாளர் ஆசிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.