
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்காலிகமாகப் பட்டாசுக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் வணிக வரித் துறையில் பதிவு செய்வது அவசியம் என அரசுக் கூடுதல் தலைமைச் செயலரும், வணிகவரித் துறை ஆணையருமான சி. சந்திரமெளலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சி.சந்திரமௌலி அறிவித்தது:
“மாவட்டத்தில் ஆண்டுதோறும் வணிகர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் பட்டாசுகளைக் கொள்முதல் செய்து தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைத்து சில்லறையில் விற்பனை செய்வது வழக்கம்.
தாற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ், வணிகவரித் துறையில் பதிவு எண் பெற்ற பிறகே கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது பதிவுச் சான்றை கடைகளில் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அனைத்து பட்டாசு வணிகர்களும் தங்களது கொள்முதலுக்கான பட்டியல்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்குப் பட்டியல்கள் வழங்க வேண்டும்.
கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தங்களது விற்பனை இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட வரிவிதிப்பு வட்டத்தில் தாக்கல் செய்து அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும்.
வணிகர்களின் நலன் கருதி தற்காலிகமாக பதிவுச் சான்று பெற ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாற்காலிக பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் உதவி மையங்களை அணுகி நேரடியாக விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றுக்கொள்ளலாம்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.