
தஞ்சாவூர் தொகுதியில், முன் அனுமதி பெற்றால்தான், வேட்பாளர்கள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆ. அண்ணாதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
“வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்க இருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் அவர்கள் செய்யும் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும். வேட்பாளர்களின் விளம்பரங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுக் கண்காணித்து வருகிறது.
வேட்பாளர்கள் தொடர்பாக செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டுமானால், இக்குழுவிடம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மூன்று நாள்களுக்கு முன்பும், அங்கீகாரம் பெறாத கட்சிகள், சுயேச்சைகள் 7 நாள்களுக்கு முன்பும் விண்ணப்பித்து முன் அனுமதி கடிதம் பெற்று விளம்பரம் செய்ய வேண்டும்.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் வேட்பாளர் தொடர்பாக ஒளிபரப்பு செய்வதற்கும் இக்குழுவிடம் முன் அனுமதி வாங்க வேண்டும். அதற்குரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்து சான்று பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேட்பாளர்கள் தொடர்பாக விளம்பரம் செய்யப்பட்டால், தொடர்புடைய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
செய்தித்தாளில் வேட்பாளர்கள் தொடர்பாக பணம் கொடுத்து செய்திகள் வெளியிடப்படுவதை ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு முழுமையாகக் கண்காணிக்கும் என்று ஆட்சியர் கூறினார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.