
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள 104 தெருக்களிலும் ரூ.52.69 கோடி திட்ட மதிப்பீட்டில் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த மேம்பாட்டு பணிகளை திமுக எம்.பி., தயாநிதி மாறன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் பொறுப்பு என்பது அரசு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு பொறுப்பு. அது மாதிரியான பொறுப்பை வாங்கிக் கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை இதுபோன்று ஆளுநர் ரவி சிரமத்துக்குள்ளாக்கி வருகிறார். மத்திய அரசு, வேறு ஏதேனும் உயர் பொறுப்புகளை வழங்கும் என்ற ஆசையில் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வருகிறார்.” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “ஊட்டியில் இருக்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா?” என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆளுநரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கண்டனத்துக்குறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், ஊட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 முதல் 23ஆம் தேதி வரை ஆளுநரின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதற்கு வந்திருந்த ஆளுநரின் விருந்தினர்கள் தனியார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாகவும், ஆளுநர் மாளிகையில் அவர்கள் தங்க வைக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
திமுக மீது நீதிபதி பாகுபாடு காட்டக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி சரமாரி குற்றச்சாட்டு!
விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகைக் கட்டணம், டீ மற்றும் காபி உட்பட உணவு, விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவும் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும், அரசு வாகனங்களோ, ஆளுநர் மாளிகை ஊழியர்களோ அந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்படவில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.