ஜனாதிபதியின் ஏஜென்ட்தான் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை!

By Manikanda PrabuFirst Published Jun 11, 2023, 2:03 PM IST
Highlights

ஜனாதிபதியின் ஏஜென்ட்தான் ஆளுநர் நீதிமன்றத்திற்கு சென்றால் மிகப்பெரிய விமர்சனங்களை அவர் எதிர்கொள்வார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை சின்னப்பா நகரில் தமிழக அரசின் மகளிர் சுய உதவி குழு சார்பாக மூன்று லட்ச ரூபாய் அரசு மானியத்தோடு நவீன சலவை அகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு சலவையகத்தை திறந்து வைத்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் நேற்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். இந்த பல்கலைக்கழகங்களில் இன்னென்ன தேதிகளில் பட்டமளிப்பு விழாக்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் என்று. பட்டமளிப்பு விழா குறித்து கொரோனா காலத்தை நாங்கள் சொல்லவில்லை. அப்போது ஆளுநராக இவர் இல்லை, அப்போது ஆளுநர் வேறு. உரிய காலத்தில் பட்டமளிப்பு விழாக்களை நடத்தினால் தான் அது மாணவர்களுக்கு பயனாக இருக்கும்.” என்றார்.

தமிழக ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ரகுபதி, ஜனாதிபதியையே பதவியை விட்டு இறக்கக்கூடிய அதிகாரம் அரசியல் சட்டத்தில் உள்ளது. ஜனாதிபதியின் ஏஜென்ட்தான் ஆளுநர் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பகலிலேயே தூங்கும் தமிழக சுகாதாரத்துறை: விஜயபாஸ்கர் சாடல்!

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசின் பிரதிநிதியாக தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய ஆளுநர், சண்டை மூட்டும் நபராக செயல்பட்டு வருகிறார். மேற்பார்வையாளராக மட்டுமே ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் ஆளுநர் எல்லை மீறி போய்க் கொண்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு செய்யும் பணிகளை ஆளுநர் தானே செய்து வருகிறார். கூட்டம் கூட்டுவது, கருத்தரங்கு நடத்துவது கலை நிகழ்ச்சி நடத்த வேண்டியது என அவரது நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கது. இவரின் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு  நாங்கள் சென்றால் மிகப்பெரிய விமர்சனங்களை ஆளுநர் சந்திப்பார். மற்ற மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக உள்ள நீதிமன்ற தீர்ப்பு  தமிழக ஆளுநருக்கு தக்க பாடத்தை கற்பிக்கும்.” என்றார்.

புதுக்கோட்டையில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு பாராட்டு விழா நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அப்போது அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

click me!