தமிழக சுகாதாரத்துறை மெத்தனமாகவும், மெதுவாகவும் செயல்படுவதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை மரியாதை நிமித்தமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், “தமிழக சுகாதாரத்துறை மெத்தனமாகவும்,மெதுவாகவும் செயல்படுகிறது,பகலிலேயே தூங்கும் துறையாக தமிழக சுகாதாரத்துறை உள்ளது. புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரி அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியின் மெத்தன போக்கால் இரண்டு ஆண்டு காலம் அந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பயில முடியாமல் 150 மருத்துவ இடங்கள் வீணாகிவிட்டது. இப்போதாவது இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்கியது வரவேற்கத்தக்கது.” என்றார்.
தமிழகத்தில் ஏற்கனவே மூடப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்களின் பெயரை மட்டும் மாற்றி நகர்புற நல வாழ்வு மையங்களாக இந்த ஆட்சியாளர்கள் திறந்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டிய அவர், “இதில் பெயர் மட்டும் தான் மாறி உள்ளது. தற்போது திறக்கப்படும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும்தான் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த இடங்களில் நகர்ப்புற நல மையங்கள் தேவையற்றது. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு தான் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதனை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் திறப்போம்.” என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், “2021 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியார் தமிழகத்தில் இரண்டாவது பல் மருத்துவமனைக்கு பூமி பூஜை போடப்பட்டு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது இந்த மருத்துவ கல்லூரி 50 மருத்துவ இடங்களுடன் தொடங்கப்படுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு ஆண்டு காலம் காலதாமதமாக கட்டியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல் மருத்துவமனையில் இடங்கள் நிரப்பப்படாமல் போனது. இந்த அரசு மெதுவாக உள்ளது என்பதை விட மெத்தனமாக உள்ளது என்று பகிரகமாக சுட்டி காட்ட விரும்புகிறேன். இதேபோன்று மெடிக்கல் கல்லூரி விவகாரத்தில் தும்பை விட்டு வாழை பிடிப்பது போன்று மருத்துவ இடங்களை இழந்து விட்டு தற்போது மீண்டும் இரண்டு கல்லூரிகளுக்கு மட்டும் மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர்.” என்று குற்றம் சாட்டினார்.
அரசு மிகவும் விழிப்போடு குறிப்பாக சுகாதாரத்துறை மிகவும் விழிப்போடு இருக்க வேண்டியதை விட்டுவிட்டு பகலிலேயே தூங்கக்கூடிய துறையாக தற்போது சுகாதாரத்துறை மாறிவிட்டது என்று விமர்சித்த அவர், மெத்தனத்தை தவிர்த்து அரசு இயந்திரம் பேகத்தை கூட்டி மக்களுக்கு செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், “மாவட்டத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாதவாறு புதுக்கோட்டையில் வேளாண்மை கல்லூரி மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவைகளை கொண்டு வந்ததோடு அடுக்குமாடி குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் நாங்கள் எங்களுடைய அரசில் கொண்டு வந்தோம். தற்போது தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கும் என்ஓசியை வழங்கியது அதிமுக ஆட்சிதான். தமிழகத்தில் அதிகமாக மருத்துவ கல்லூரிகளையும் அதிகமாக மருத்துவ இடங்களையும் பெற்றுத் தந்த பெருமை அதிமுக அரசியே சாரும். இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் தற்போது ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் சேர உள்ளனர் இதற்கும் அதிமுக அரசுதான் காரணம்.
அமித் ஷா தமிழ்நாடு வருகை: பாஜகவுக்கு கைகொடுக்குமா? பின் தங்குவது ஏன்?
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா குழந்தை பரிசு பெட்டகம் இதேபோன்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் அதிமுக ஆட்சியாளர்கள் கொண்டுவரப்பட்டது தற்போது இந்த இரண்டு பெட்டகங்களும் காலதாமதமாக வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு இடர்பாடுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கின்றனர். இனியாவது அரசு கண்ணும் கருத்துமாக ஏற்கனவே உள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை அதிமுக ஆட்சி இல் இருந்த திட்டங்களை மட்டுமே தற்போது செயல்படுத்தி வருகின்றனர். தங்களுடைய நிலைமையை தக்க வைத்துக் கொள்வதில் தற்போதைய திமுக அரசு தடுமாற்றத்தில் உள்ளது. தனது நிலையும் தக்க வைத்துக் கொண்டு புதிய திட்டங்களையும் உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
அம்மா மினி கிளினிக் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது 2000 மினிகணக்குகள் கிராமங்கள் தோறும் திறக்கப்பட்டன ஆனால் அதனை மூடிவிட்டு தற்போது நகர் நல மையங்களை இந்த அரசு துவங்கியுள்ளது அதுவும் குறிப்பாக மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் தான் இது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை கிராமங்களை நோக்கி சுகாதாரம் சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதற்கு மூடி விழா கண்டுவிட்டு அதையே பெயர் மாற்றி நகர் நல மையங்கள் என்று பெயர் வைத்து மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் மட்டும் திறந்து வருகின்றனர்.
அம்மா என்று பெயர் வைத்ததாலே அந்தத் திட்டத்திற்கு திமுக அரசு முடிவிலாக் கண்டது நாங்கள் கேட்பதெல்லாம் அம்மா என்ற பெயரை வேண்டுமானால் எடுத்து விடுங்கள் மினி கிளினிக்குகள் என்று கிராமங்கள் தோறும் திறக்க வேண்டும் மீண்டும் அதிமுக ஆட்சி வந்த பிறகு அம்மா என்று பெயரை நாங்கள் சூட்டிக் கொள்கிறோம்.” என்று முன்னாள் அமைச்சர் விஜபாஸ்கர் தெரிவித்தார்.